Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 20 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் அரிய வகை கனிம வளங்களை கண்டறிந்து, அவற்றை முழுமையாக பயன்படுத்தும் நோக்கில் ரேர் எர்த் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் அமைக்க முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கனிம வளங்களை முறையாக பயன்படுத்தி அரசின் வருவாயை அதிகரிப்பது தொடர்பாக, அமராவதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் கனிமவளத்துறை அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், அரிய வகை கனிமங்களை கண்டறிவதுடன், அவற்றுக்கு மதிப்பு கூட்டும் வகையில் 'ஆந்திரா ரேர் எர்த் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்' என்ற புதிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ஆந்திர மாநில கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தை (ஏபிஎம்டிசி) தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்தின் (என்எம்டிசி) மாதிரியில் சிறந்த சுரங்க நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையானால் தனியார் நிறுவனங்களின் உதவியை பெறலாம் என்றும் அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார். ஏபிஎம்டிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பை அடிப்படையாக கொண்டு, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான ஆரம்ப பங்கு வெளியீட்டு (ஐ.பி.ஓ.) நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
மாநிலத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தடையின்றி நிலக்கரி வழங்கும் வகையில், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தில் ஏபிஎம்டிசி நிறுவனம் பங்கேற்க உள்ளது. இந்த சுரங்கங்களில் மொத்தம் 1,774.6 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஆந்திராவில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 6,500 குவாரி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் 223 குத்தகை புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கு தீர்வு காண்பதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் கனிம வளங்களை வருவாய் ஈட்டும் ஆதாரமாக மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினருக்கான சொத்தாக கருதி அவற்றின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் கனிம வள ஆய்வு மற்றும் சுரங்க ஏலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்பிரசாத், கனிமவளத்துறை முதன்மைச் செயலாளர் முகேஷ் குமார் மீனா, நிதித்துறை செயலாளர் ரொனால்டு ரோஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA