கர்நாடகாவில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவி கடத்தல்? – காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் வீடியோ வைரல்
கர்நாடகா, 20 நவம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கனச்சூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவி ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை ஒரு கும்பல் காரில் ஏற
பெங்களூரு மாணவி கடத்தல்


கர்நாடகா, 20 நவம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கனச்சூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவி ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை ஒரு கும்பல் காரில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், கல்லூரி வளாகத்தில் இருந்த மாணவியை அணுகிய சிலர், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தார் (Thar) ரக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பின்னர் அந்த வாகனம் கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்ததாகவும், இதன் காரணமாக அவரது குடும்பத்தினரே மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த மங்களூரு மாநகர காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி, வெள்ளிக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், மாணவியைக் கண்டறியவும் உத்தரவிட்டார். இதையடுத்து, மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், மாணவி மேஜர் என்பதால், எங்கு வசிக்க வேண்டும், யாருடன் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்றும், குடும்பச் சூழல் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையிலான உறவு எதுவாக இருந்தாலும், வயது வந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை அழைத்துச் செல்வது குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P