Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 நவம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகே உள்ள நில அளவைத் தூணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நியாயமற்றது என்றும், இதனை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுவரை தீபம் ஏற்றப்படாத இடத்தில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருப்பது சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பாகாது என்றும், இது இடைக்கால உத்தரவு என உச்சநீதிமன்றமே குறிப்பிட்டுள்ள நிலையில், இத்தகைய அனுமதி வழங்குவது நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நில அளவைத் தூணில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதற்கான ஆதாரங்களை தமிழக அரசும், கோவில் நிர்வாகமும் முன்வைத்துள்ள நிலையில், அதனைப் புறக்கணித்து இடைக்கால அனுமதி வழங்கியிருப்பது ஏற்புடையதல்ல என்றும், பொதுவாக இடைக்கால உத்தரவுகள் இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது எனும்போது, தேவையின்றி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைப் பயன்படுத்துவது மாநில அரசின் உரிமையில் தலையிடும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதுடன், பதற்றத்தை ஏற்படுத்த முயலும் மதவெறி சக்திகளை உறுதியுடன் எதிர்கொண்டு, சமூக அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P