Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 20 நவம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவில் வளாகத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக, கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராமர் கோவில் வளாகத்திற்குள் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப் பணிகள் எதுவும் தற்போது நிலுவையில் இல்லை. கோவில் வளாகத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், கட்டுமானப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்வதற்காக இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) மற்றும் டிசிஇ (TCE) ஆகிய திட்டக் கண்காணிப்பு நிறுவனங்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு முக்கிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிப்பதே இலக்கு என்றும் நிருபேந்திர மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்களின் இறுதிக்கட்ட கணக்குகளை முடிப்பது, நிலுவைத் தொகைகளை இறுதி செய்வது மற்றும் பணிகளில் தரக்குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதற்கேற்ப தொகையைப் பிடித்தம் செய்வது உள்ளிட்ட நிதி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், வெளிப்புற சுற்றுச்சுவர் தவிர்த்து கோவில் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டமைப்புகளும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனால், அவற்றைப் பராமரிப்பது மற்றும் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் தற்போது அறக்கட்டளையிடம் சென்றுள்ளன.
இதற்கிடையே, கோவில் வளாகத்திற்கு வெளியே இரண்டு இடங்களில் மட்டும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவை கூட்ட அரங்கம் மற்றும் அறக்கட்டளை அலுவலகம், சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம் ஆகியவை ஆகும்.
ராமர் கோவில் வளாகத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய பணிகளையும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V