Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே மாநகராட்சி பெயரில் பார்க்கிங் ரசீதுகளை வழங்கி, வாகன ஓட்டிகளிடம் அனுமதியின்றி கட்டணம் வசூலித்ததாக 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து ரூ.1,300 ரொக்கப் பணம் மற்றும் 100 பார்க்கிங் ரசீதுகள் அடங்கிய புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து
டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி,
கடந்த நவம்பர் 19-ம் தேதி செங்கோட்டை காவல் சாவடிக்கு ஒரு புகார் தகவல் கிடைத்தது.
அதில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் 2-வது நுழைவாயில் அருகே, அப்பர் சுபாஷ் மார்க் பகுதியில் மாநகராட்சி (MCD) பெயரில் பார்க்கிங் ரசீதுகள் வழங்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, காலை 10.40 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒருவர் வாகன ஓட்டிகளை அழைத்து அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துமாறு கூறிக்கொண்டிருந்தார்.
போலீசாரைக் கண்டதும் அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இருப்பினும், போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர் டெல்லி சாஸ்திரி பார்க்கைச் சேர்ந்த முகமது நவ்ஷாத் (40) என்பது தெரியவந்தது. மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதியை நிர்வகிப்பதற்கான அனுமதி அல்லது உரிமம் குறித்து போலீசார் கேட்டபோது, அவரால் செல்லுபடியாகும் உரிமம், ஒதுக்கீட்டுக் கடிதம் அல்லது அனுமதி ஆவணம் எதையும் சமர்ப்பிக்க முடியவில்லை.
இதையடுத்து, அவரிடம் சோதனை நடத்தியபோது ரூ.1,300 ரொக்கப் பணம் மற்றும் 100 பார்க்கிங் ரசீதுகள் கொண்ட புத்தகம் கைப்பற்றப்பட்டது.
அதில், 18 ரசீதுகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், 82 ரசீதுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அந்த ரசீதுகளில் MCD AUTH. SCT./BIKE PARKING என அச்சிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முகமது நவ்ஷாத் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு பார்க்கிங் வசதியை நிர்வகிப்பதற்கான மாநகராட்சி உரிமத்தைப் பெற்றிருந்தது தெரியவந்தது.
ஆனால், உரிய கட்டண நிலுவையைச் செலுத்தாத காரணத்தால் கடந்த 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் அவர் தொடர்ந்து பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது கோட்வாலி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 2023-ன் 318(4), 319(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V