இந்தியா - ஜப்பான் இடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!
புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், நவம்பர் 18 முதல் 20-ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார உ
Jaishankar


புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், நவம்பர் 18 முதல் 20-ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின்போது இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருடன் இணைந்து நான்காவது இந்தியா - ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நிலையிலான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளும் உறுதிப்பாட்டைத் தெரிவித்தன.

மேலும், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ராணுவக் கூட்டுப் பயிற்சிகள், பாதுகாப்புத்துறை தொழில்துறை, கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளங்களை ஜப்பான் தற்காப்புப் படைகள் பயன்படுத்துவது தொடர்பான விருப்பக் கடிதம் கையெழுத்தானதையும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் திட்ட அடிப்படையிலான பொருளாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியையும் இரு நாடுகளும் மீண்டும் வெளிப்படுத்தின. இந்த 2+2 பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகியுடன் 19-வது வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான மூலோபாய பேச்சுவார்த்தையிலும் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இந்தச் சந்திப்பில், ஜனநாயக மதிப்புகள், பரஸ்பர நம்பிக்கை, பொதுவான நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த இரு அமைச்சர்களும் உறுதியளித்தனர்.

மேலும், பொருளாதாரப் பாதுகாப்பு, தடையற்ற விநியோகச் சங்கிலி, குறைக்கடத்திகள், முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்கள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தப் பயணம் இந்தியா - ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V