Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 20 நவம்பர் (ஹி.ச.)
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இதில் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கோவில்பட்டி நகராட்சியில் வீரவாஞ்சிநகர், சுப்பிரமணியபுரம், கூடுதல் பேருந்து நிலையத்தின் பின்புறம், பார்க் ரோடு, புதுக்கிராமம் ஆகிய 5 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் நகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் முறையாகச் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புதுக்கிராமத்தில் உள்ள உரம் தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்பட்ட 21 மெட்ரிக் டன் இயற்கை உரம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிப்பதுடன், பயிர்களின் வளர்ச்சியும் மேம்படும். மேலும், மண்ணின் தரத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெறுவதற்கும் இயற்கை உரம் உதவியாக இருக்கும்.
இதனால் உரத்தைப் பெற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். பலரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது டிராக்டர்களில் உரத்தை ஏற்றிச் சென்றனர்.
நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை வீணாக்காமல் பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கிறது.
எனவே, இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி உரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சியின் சுகாதாரப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V