ஒடிசா கடற்கரையை நெருங்கிய அக்வான் புயல் – ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!
புவனேஸ்வர், 20 நவம்பர் (ஹி.ச.) வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த 15-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான இந்த வானிலைச் சுழற்சி, 18-ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் எனப் பெயரிடப்பட்டது. மேற்கு மத்திய வங்கக்கடலில்
Cyclone


புவனேஸ்வர், 20 நவம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த 15-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான இந்த வானிலைச் சுழற்சி, 18-ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் எனப் பெயரிடப்பட்டது.

மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த இந்தப் புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது.

இதற்கிடையே, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வு சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும் என்றும், அப்போது மணிக்கு அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கத்தால் ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஏற்கனவே மழை பெய்து வருகிறது. கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபாரா, கந்தமால், ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள ஐந்து மாவட்டங்களில் 941 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

புயலால் அதிகம் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் மற்றும் இலவச உணவு வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,098 கர்ப்பிணிகளும் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரிடரை எதிர்கொள்ள மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட 300 மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V