Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 நவம்பர் (ஹி.S.)
சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரும் பதிப்பாளருமான கௌதமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்வதால், அங்கு நிலவும் இடநெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கில் சுமார் ரூ.27 ஆயிரம் கோடி செலவில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பன்னூர், திருப்போரூர், படாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. 2,325 ஹெக்டேர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, 1,527 ஹெக்டேர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த 2023-ம் ஆண்டு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
மீதமுள்ள 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டது. இதுவரை 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
எவ்வித தொழில்நுட்ப புள்ளிவிவரங்கள், நிபுணர் குழு அறிக்கைகள் மற்றும் பொருளாதார ஆய்வுகள் இன்றி திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, திட்டத்தைக் கைவிடும் அறிவிப்புக்கு தடை விதிக்கவும், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க தடை விதிக்கவும் கோரியுள்ளார்.
மேலும், அரசின் முடிவை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, அதை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ஏற்கெனவே சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இதற்காக அரசுப் பணம் ரூ.680 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை பாதியிலேயே எவ்வாறு கைவிட முடியும் என்றும், தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட இடம் தற்போது எவ்வாறு சாத்தியமற்றதாகக் கருதப்படுகிறது என்றும் அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், பரந்தூர் பகுதியில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் இருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றார்.
மேலும், திட்டத்தைக் கைவிடுவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதற்கான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசும் இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V