வணிக நிறுவனங்களில் சர்க்கரை இருப்பு 1,000 குவிண்டாலுக்கு அதிகமாக வைக்கக்கூடாது - தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) நாடு முழுவதும் சர்க்கரை விற்பனையை முறைப்படுத்தவும், தேவையற்ற பதுக்கலைத் தடுக்கவும் சர்க்கரை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு மற்றும் இருப்பு வைத்திருக்கும் கால அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு பிறப
Go


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

நாடு முழுவதும் சர்க்கரை விற்பனையை முறைப்படுத்தவும், தேவையற்ற பதுக்கலைத் தடுக்கவும் சர்க்கரை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு மற்றும் இருப்பு வைத்திருக்கும் கால அளவை மத்திய அரசு குறைத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசிதழில் மறுபதிப்பு செய்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, சர்க்கரை வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் சர்க்கரையை அதிகபட்சமாக 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வியாபாரிகள் சர்க்கரையை 30 நாட்கள் வரை இருப்பு வைத்திருக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. தற்போது இந்தக் கால அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்க்கரை விற்பனையாளர்கள் தங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், வியாபாரிகள் எந்தவொரு இடத்திலும் வைத்திருக்கக்கூடிய சர்க்கரையின் அதிகபட்ச அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு இடத்தில் 1,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைத்திருக்கக் கூடாது என புதிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த இருப்பு வரம்பு 2,000 குவிண்டாலாக இருந்தது. தற்போது அதனை 1,000 குவிண்டாலாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பது, விற்பனையைச் சீராகக் கண்காணிப்பது, சர்க்கரை பதுக்கலைக் கட்டுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் உள்ள சர்க்கரை வியாபாரிகளுக்குப் பொருந்தும் என்பதால் சர்க்கரை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் புதிய இருப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V