நகர்ப்புற உள்ளாட்சியில் 4,758 பணிகளை மேற்கொள்ள ரூ.1,019 கோடி ஒதுக்கீடு!
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1,019.61 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4,758 வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சாலைகள், குடி
Chennai


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1,019.61 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 4,758 வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சாலைகள், குடிநீர் வசதிகள், பூங்காக்கள், பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்விடச் சூழலை உருவாக்கும் நோக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.366.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 599.79 கி.மீ. நீளத்தில் மொத்தம் 3,765 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த மதுரை, கடலூர் மாநகராட்சிகள் மற்றும் கம்பம், சிதம்பரம் நகராட்சிகளில் ரூ.119 கோடி மதிப்பீட்டில் 5 குடிநீர் திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.97.36 கோடியில் 457 பணிகள் நடைபெற்று வருகின்றன.

பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் ரூ.14.87 கோடி செலவில் 87 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பறைகளை ஏற்படுத்த ரூ.71.40 கோடியில் 106 புதிய கட்டடங்களும், ஏற்கெனவே உள்ள 78 வகுப்பறைகளைப் பழுதுபார்த்து பராமரிக்க ரூ.13.83 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.29.68 கோடியில் 123 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் 9 அங்கன்வாடி மையங்களைச் சீரமைக்க ரூ.38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.13.14 கோடியில் 78 விளையாட்டு உட்கட்டமைப்புப் பணிகளும், ரூ.14.35 கோடியில் 2 விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுதவிர, திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் ரூ.279.37 கோடி மதிப்பீட்டில் 48 பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுதல், உயிரி எரிவாயு ஆலைகள் அமைத்தல், வள மீட்பு மையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.

இவ்வாறு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் மொத்தம் ரூ.1,019.61 கோடி மதிப்பீட்டில் 4,758 வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V