தூத்துக்குடி விவசாயிகளுக்கு 27-ந்தேதி தண்ணீர் திறக்க திட்டம் – ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி, 20 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கான பாசன வசதி, அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு, கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Dam


தூத்துக்குடி, 20 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கான பாசன வசதி, அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு, கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் மற்றும் அதிகாரிகள், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில்,

திருச்செந்தூரில் இனி மாதந்தோறும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முறையாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.

மேலும், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் வழங்குவதற்கு பணம் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும் என்றும், புகாரின் அடிப்படையில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

அரசு அதிகாரிகள் மீது புகார்கள் இருந்தால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரை காத்திருக்காமல், உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அறிவுறுத்தினர்.

வெள்ளமடம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும்போது விவசாய நிலங்கள் இல்லாத பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட அணைகளில் தற்போது 37 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இருப்பினும் விவசாய நிலங்களின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு, வருகிற 27-ந்தேதி தண்ணீர் திறக்க அனுமதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படும். முதற்கட்டமாக நேரடி பாசனப் பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படும்.

மழை பெய்து அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உயர்ந்தால் குளங்கள் மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர வடிகால்கள், தனிக்கால்வாய்கள், மடைகள் ஆகியவற்றை தூர்வாரவும், தென்கால் கரைகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வண்ணான்குளத்தில் விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது.

இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V