பாலியல் புகாரில் அரசியல் தலையீடா?- தவெக அரசுக்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!
சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.) மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது புகார் தெரிவிக்கச் சென்றபோது, அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் காவல்துறையினர் புகாரைப் பெற மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவக
Ttv dhinakaran


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)

மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் மீது புகார் தெரிவிக்கச் சென்றபோது, அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீட்டால் காவல்துறையினர் புகாரைப் பெற மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசையும், காவல்துறையையும் விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

மதுரையில் காவலரின் மனைவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மருத்துவர் ஒருவர் மீது புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது அமைச்சர் நிர்மல்குமாரின் தலையீடு காரணமாக புகாரைப் பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரின் உண்மைத்தன்மையை விசாரிப்பதற்கு முன்பே புகாரைப் பெற மறுப்பது முறையற்ற செயலாகும்.

மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய காவல்துறையே அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுவது சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் என பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய அமைச்சர்கள், காவல் நிலையங்களிலேயே தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மேலும், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குச் சென்று காவலர்களை மிரட்டி வீடியோ வெளியிடுவது, போதிய ஆதாரங்கள் இன்றி பொருளாதார வல்லுநர்களைக் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடுவது,

பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக்கூடப் பெறக்கூடாது என அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்பாடுகள் காவல்துறையின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகளும் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் குற்றங்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரை அரசியல் தலையீடுகள் மூலம் கட்டுப்படுத்துவது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையைப் பாதிக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மேடைகளில் பேசும் அமைச்சர்கள், நடைமுறையில் காவல்துறையினரின் விசாரணைகளில் தலையிடுவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை என்பது அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பு அல்ல. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய முக்கியமான அமைப்பு என்பதை உணர்ந்து,

அரசியல் தலையீடுகள் இன்றி காவல்துறை செயல்படுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V