Enter your Email Address to subscribe to our newsletters

அருணாச்சலபிரதேசம், 21 நவம்பர் (ஹி.ச.)
அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்ற அமித் ஷா, சியாங் பள்ளத்தாக்கில் முன்மொழியப்பட்டுள்ள சியாங் மேல் பல்நோக்கு திட்டத்திற்கு (SUMP) எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுக்களின் கவலைகள் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சியாங் அணைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அருணாச்சல பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தத் திட்டம் அவசியமானது. இருப்பினும், சியாங் பள்ளத்தாக்கு மக்களின் கோரிக்கைகள் குறித்து நேர்மறையான அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்படும். பழங்குடியின மக்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படாது. நாட்டிலேயே சிறந்த இழப்பீட்டுத் தொகுப்பு வழங்கப்படும் என்றார்.
மேலும், வடகிழக்கு மாநிலங்களிலேயே அருணாச்சல பிரதேசம் சீனா, பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் மிக நீண்ட சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்வதாகவும், எனவே அங்கு அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
11,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட அணைத் திட்டத்திற்கு எதிராக அண்மையில் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் போராட்டங்கள் வன்முறையாக மாறின.
இத்திட்டத்தால் தங்களது வாழ்விடங்கள் பாதிக்கப்படும் என்றும், பழங்குடியின மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் பல்வேறு உள்ளூர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஆதி பானே கெபாங் யுனைடெட் (ABKU) அமைப்பு அமித் ஷாவிடம் மனு அளித்து, சியாங் அணைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் அடுத்தடுத்த மாநில அரசுகளால் பரிசீலிக்கப்பட்டு, இருமுறை கைவிடப்பட்ட இந்தத் திட்டம் 2024-ல் மீண்டும் கொண்டுவரப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமித் ஷா தனது பயணத்தின்போது அருணாச்சல பிரதேச காவல்துறைக்கான குடியரசுத் தலைவரின் காவல் வண்ணக் கொடி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
சனிக்கிழமை இடாநகரில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள அவர், அருணாச்சல பிரதேச கூட்டுறவு தொலைநோக்கு ஆவணம் 2047-ஐ வெளியிடுவதுடன், புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்க உள்ளார்.
தொடர்ந்து, இடாநகர் அருகே ஹொலோங்கியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 12-வது பட்டாலியனுக்கான புதிய வளாகத்தைத் திறந்து வைத்துவிட்டு டெல்லி
திரும்ப உள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P