Enter your Email Address to subscribe to our newsletters

மேற்குவங்கம், 21 நவம்பர் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பவள விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிப் பாதை மற்றும் கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியா தற்போது தனது வளர்ச்சிக்கான எல்லைகளை விரிவுபடுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
சவால்களைத் தாண்டி சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற இலக்குடன் நாடு முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த காலங்களில் வறுமை என்பது இந்தியாவில் ஒருபோதும் முழுமையாகத் தீர்க்க முடியாத பிரச்சினை என்ற மனநிலை நிலவி வந்ததாகத் தெரிவித்தார்.
சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்பே செங்கோட்டையில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதில் போதிய முனைப்பு காட்டப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
நாட்டின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் வறுமையை ஒழிப்பது சாத்தியமற்றது என்ற எண்ணம் அப்போது ஆட்சியாளர்களிடம் இருந்ததாகவும், இதன் காரணமாக வறுமை ஒழிப்புக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் தயக்கம் நிலவியதாகவும் அவர் கூறினார்.
தாங்கள் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஏழை மக்களின் வீடுகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக செங்கோட்டையில் அறிவித்ததாக பிரதமர் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பு வெளியானபோது நாடாளுமன்றத்தில் சிலர் கேலி செய்ததாகவும், நாட்டின் பிரதமர் கழிப்பறை கட்டுவது குறித்து பேசுவதா என விமர்சனங்கள் எழுந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஆனால், கழிப்பறை என்பது வெறும் அடிப்படை வசதி மட்டுமல்ல; ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான தேவை என்பதை விமர்சித்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக, கிராமப்புற ஏழைப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு கழிப்பறை வசதி எந்த அளவுக்கு அவசியமானது என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு, ஐஐடி காரக்பூர் பவள விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Hindusthan Samachar / LOGESHWARI V