Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 நவம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, மாருதி நிறுவனத்தின் தொடக்க காலத்தில் சோனியா காந்திக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
'காங்கிரஸின் இருண்ட அத்தியாயம் - அத்தியாயம் 250' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில், வெளிநாட்டுக் குடியுரிமை கொண்டிருந்த சோனியா காந்தி, மாருதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 50 சதவீத பங்குகளை வைத்திருந்தவராகவும் இருந்தாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 1970-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி சஞ்சய் காந்தி, சோனியா காந்தியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 'மாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளார்.
மாருதி நிறுவனம் 1970-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கான கார் தயாரிப்பு உரிமம் 1968-ம் ஆண்டிலேயே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1969-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில், அவரது மருமகள் சோனியா காந்தியுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு கார் தயாரிப்பு அனுமதி வழங்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1972-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் காந்தி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது, அதற்கான செலவுகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டதா என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டுக் குடியுரிமை கொண்ட ஒருவர் இந்திய நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்க அன்றைய விதிமுறைகள் அனுமதித்தனவா, அப்படியிருக்க சோனியா காந்தி எவ்வாறு நிறுவனத்தின் இயக்குநராகவும் 50 சதவீத பங்குதாரராகவும் ஆனார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதவிர, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் மூலம் சோனியா காந்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டதா, ஹரியானாவில் வெளிநாட்டுக் குடியுரிமை கொண்டவர்களுக்கு நிலம் ஒதுக்குவதற்கான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், மாருதி நிறுவனத்துக்கு எவ்வாறு நிலம் வழங்கப்பட்டது என்றும் அவர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்குள் தனியார் நிறுவனத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது எப்படி, பிரதமரின் தனிச் செயலராக இருந்த தவான் அந்த நிறுவனத்தின் இயக்குநரானது எப்படி என்றும் நிஷிகாந்த் துபே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்காக அரசு நிறுவனங்கள் சிமெண்ட், இரும்பு, நிலக்கரி உள்ளிட்டவற்றை பணம் பெறாமல் வழங்கினவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக, சொந்த முதலீடு இல்லாமல் மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கியது எப்படி என்பது குறித்து சோனியா காந்தி தனது புத்தகத்தில் விளக்கியிருக்க வேண்டும் என்றும், இந்திரா காந்தி மாருதி நிறுவனத்தை அவருக்குப் பரிசாக வழங்கினாரா என்றும் விமர்சனமாகக் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V