Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 நவம்பர் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்தச் சேவைகளுக்கு முறையான கொள்கையை கர்நாடக அரசு வெளியிடும் வரை பைக் டாக்ஸி இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மற்றும் பைக் டாக்ஸி நலச் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்தது.இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பைக் டாக்ஸி சேவைகளை முழுமையாகத் தடை செய்வதைவிட, அவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்கி முறைப்படுத்துவதே பொருத்தமானது என்று தெரிவித்தனர்.
மேலும், குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வசதியை பைக் டாக்ஸி சேவைகள் வழங்குவதால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
பைக் டாக்ஸி சேவைகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மத்திய அரசும் இதற்குத் தடை இல்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், சேவைகளைத் தடை செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, பைக் டாக்ஸி சேவைகளுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / LOGESHWARI V