ரத்த உறவு திருமணங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்!
புதுடெல்லி, 21 நவம்பர் (ஹி.ச.) நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலை
Court


புதுடெல்லி, 21 நவம்பர் (ஹி.ச.)

நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் நடைபெறும்போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் மற்றும் மரபணு நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக வாதிட்டார்.

இதுபோன்ற திருமணங்களால் அடுத்தடுத்த தலைமுறைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்வதோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்குவதோ நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று தெரிவித்தது.

எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது என்றும் தெளிவுபடுத்தியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாகக் கூறிய நீதிபதிகள், நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வது தொடர்பாகத் தனியான சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

அதேநேரத்தில், இதுபோன்ற திருமணங்களால் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படக்கூடிய மரபணு பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதற்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Hindusthan Samachar / LOGESHWARI V