Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 21 நவம்பர் (ஹி.ச.)
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனால் திருமானூர் பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் நீரின் வேகம் அதிகரித்து, மண் அரிப்பு ஏற்படுவதுடன் கரைகள் உடையும் அபாயமும் இருந்து வருகிறது.
குறிப்பாக, அதிகப்படியான நீர் வெளியேறும் சமயங்களில் கரைகள் சேதமடைவதைத் தடுப்பது அவசியமாகியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, ஆற்றின் கரைகளைப் பாதுகாத்து பலப்படுத்தும் வகையில் ரூ.7.56 கோடி செலவில் 210 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இப்பணியின் முதற்கட்டமாக ஆற்றின் கரையோரப் பகுதியில் சுமார் 18 மீட்டர் ஆழத்திற்கு இரும்புத் தகடுகள் (Sheet Piles) பதிக்கப்பட்டன.
ஆனால், ஆரம்பக்கட்டப் பணிகள் முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி முழுமையடையாமல் உள்ளது.
மேலும், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் ஆற்றின் கரையோரப் பகுதி மேடு பள்ளமாகக் காட்சியளிக்கிறது.
பதிக்கப்பட்ட இரும்புத் தகடுகளும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதால் அந்தப் பகுதி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்குச் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள் அவற்றைத் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்குள் அழைத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே வெள்ளப்பெருக்கின்போது கரை அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், தடுப்புச்சுவர் பணிகள் முழுமையடையாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவும், ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி, முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம் ஆற்றின் கரைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே திருமானூர் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V