திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்ற உத்தரவு- ஆட்சியரிடம் இந்து அமைப்புகள் மனு!
மதுரை, 21 நவம்பர் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புக
Mdh


மதுரை, 21 நவம்பர் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி வழக்கறிஞர் அணி நிர்வாகி பரமசிவம்,

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்காக மாவட்ட ஆட்சியர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆலோசனை நடத்தி, தீபம் ஏற்றுவதற்குச் செல்லும் நபர்கள் யார் என்பது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், தீபம் ஏற்றப்பட்டதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக, மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வை பக்தர்கள் அனைவரும் காணும் வகையில் முக்கியமான இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, திமுக தலைமையிலான அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த பரமசிவம், அந்த ஆட்சி இந்து விரோதப் போக்குடனும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கையற்ற வகையிலும் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

தற்போதைய அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் ஆட்சி கலைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் தொடர்பாக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V