Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 21 நவம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு வழங்கப்படும் தண்ணீரும் பொதுமக்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் புதிதாகக் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல்வேறு இடங்களில் குழாய்கள் சேதமடைந்து உடைவதால், இத்திட்டத்தின் மூலமாகவும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனியார் தண்ணீர் விற்பனையாளர்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் ஏழை, எளிய குடும்பத்தினர் கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சாம்பான் ஊரணி அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது.
வாட்டர் ஏடிஎம் என அழைக்கப்படும் இந்த இயந்திரத்தில் ரூ.5 நாணயத்தைச் செலுத்தினால் ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இயந்திரம் நிறுவப்பட்டதிலிருந்து இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவில்லை. இரண்டு நாட்கள் மட்டும் சோதனை ஓட்டமாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இயந்திரத்தின் உட்பகுதியில் உள்ள உபகரணங்கள் புதிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தற்போதைய குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, வாட்டர் ஏடிஎம் மையத்தில் தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் எனத் திருப்பத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V