தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? கோவையில் வைகோ அதிரடி விளக்கம்!
கோவை, 21 நவம்பர் (ஹி.ச.) கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகே, இன்ஸ்டிடியூட் ஆஃப் தேன்சிட்டு அமைப்பின் சார்பில் மத்திய அரசின் EPR சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வ
Vaiko


கோவை, 21 நவம்பர் (ஹி.ச.)

கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகே, இன்ஸ்டிடியூட் ஆஃப் தேன்சிட்டு அமைப்பின் சார்பில் மத்திய அரசின் EPR சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி மாற்றம், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளே அதற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தமக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியபோதிலும், அவரது சில முடிவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்து வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.

முதல்வர் விஜய் குறித்துப் பேசிய வைகோ, தன்னை அண்ணன் என்று அழைத்ததன் அடிப்படையிலேயே அவரைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

மேலும், விஜய் நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாகவும், ஊழலில் ஈடுபடுபவர்களால் அவரை நெருங்க முடியாது என்றும் பாராட்டினார்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், இதற்குத் திமுகவும் தயாராக இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டதுடன், தூத்துக்குடியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

நடிகர் வடிவேலுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய வைகோ, வடிவேலுவும் தமிழர்தான் என்றும், அவரது நகைச்சுவைத் திறன் பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து மதிமுக குறித்துப் பேசிய அவர், கட்சியை யாராலும் அழிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒருகாலத்தில் கருணாநிதியே மதிமுகவை அழிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் ஆரம்பகட்டத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிய அவர், தமிழகத்தில் இருந்து முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் விளக்கமளித்தார்.

மேலும், நேற்று நடைபெற்ற துக்க நிகழ்வின்போது ஒருவர் தனது கையைப் பிடித்து இழுத்ததாகவும், அந்த நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.

தான் அப்போது முதலமைச்சருக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலேயே அங்கு சென்றதாகவும் வைகோ தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V