Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 22 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திராவில் நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில் போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட பிடிவாதங்களை கைவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் சந்திரபாபு நாயுடு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் விரைவில் நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின்போது பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த இரண்டரை ஆண்டுகால கூட்டணி அரசின் ஆட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவையே சமீபத்திய நகராட்சி, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தெரிவித்தார். இதே வெற்றி நிலையை பஞ்சாயத்து தேர்தலிலும் தொடர வேண்டும் என்றும், கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
போட்டியின்றி தேர்வு செய்யப்படும் பஞ்சாயத்துகளுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்துகளுக்கு ரூ.15 லட்சமும், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்துகளுக்கு ரூ.25 லட்சமும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்துகளுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிதியை கிராம வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், ஊக்கத்தொகை குறித்த விவரங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதில் உள்ளூர் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
கட்சியினரிடையே தனிப்பட்ட பிடிவாதங்களுக்கும், மோதல்களுக்கும் இடமளிக்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டாத நிலையில், ஆளுங்கட்சியினரே இரு அணிகளாகப் பிரிந்து போட்டியிடும் சூழல் உருவாகக்கூடாது என்றும் சந்திரபாபு நாயுடு எச்சரித்தார். எனவே, தொகுதி வாரியாக உள்ளூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கிராமங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA