ஜல்லிக்கட்டு காளை மீது கல் வீசியதால் தகராறு - மதுபோதையில் இருந்த நபர் கல்லால் அடித்துக் கொலை!
மதுரை, 22 நவம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை மீது கல் வீசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
Avaniyapuram PS


மதுரை, 22 நவம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை மீது கல் வீசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காளையின் உரிமையாளரான இளைஞரைப் பிடித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியின் மகன் முத்துப்பாண்டி (23). இவருக்கு வள்ளானந்தபுரம் நேதாஜி தெரு அருகே மாட்டுக் கொட்டகை உள்ளது.

அங்கு வளர்த்து வரும் மாடுகளை அவ்வப்போது சென்று பராமரித்து வருவது வழக்கம்.

இந்நிலையில், இரவு தனது ஜல்லிக்கட்டு காளையை அழைத்துக்கொண்டு நேதாஜி தெரு வழியாகச் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், திடீரென ஜல்லிக்கட்டு காளை மீது கல்லை வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துப்பாண்டி, ஏன் காளை மீது கல் வீசுகிறீர்கள் எனத் தட்டிக்கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் முத்துப்பாண்டி மீதும் கல்லை வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, கல்லால் அந்த நபரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முத்துப்பாண்டியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சம்பவத்தின்போது அவருடன் வேறு யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN