உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா?– முதலமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.) காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் க
இபிஎஸ்


சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடையீட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுக்கள் ஒரே வார்த்தையில் 'Dismissed' எனக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்துக்கூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டப் போராட்டத்தையும் முறையாக முன்னெடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு எதிராகப் பேசிவரும் கர்நாடக முதலமைச்சரைக் கண்டிக்காமல், டெல்லியில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் மட்டுமே முதலமைச்சர் ஆர்வம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாததால் குறுவை சாகுபடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டதாகவும், தற்போது கர்நாடக அரசு உரிய தண்ணீரை வழங்காததால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசாமல், டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியின் குடும்பக் கதையைக் கேட்டு சிரிக்க நேரம் இருக்கிறதா என்றும் முதலமைச்சர் விஜய்யைச் சாடியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடும் விவசாயிகளின் வாழ்க்கையோடும் அரசு விளையாடுவதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அதிமுக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam