Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 22 நவம்பர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினார்.
அப்போது, கொங்கு மண்டலம் இனி எதிர்காலத்தில் வெற்றி தளபதியின் தலைமையில்தான் பவனி வரும் என்றும், எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வழியில் வந்த இயக்கம் தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதைத்தான் மக்கள் கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.
மேலும், நூற்றுக்கணக்கான நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், புரட்சித்தலைவர் வேறு, புரட்சித்தலைவி வேறு, எடப்பாடி பழனிசாமி வேறு என விமர்சித்தார்.
இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த ஒருவரை பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் உயர்த்துவதற்கு உறுதுணையாக இருந்ததை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டுப் பேசுவதாகவும், அதற்கு காலம் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார்.
தனி இயக்கமாக கொங்கு மண்டலத்தில் 25 தொகுதிகளை வென்றது தளபதியாரின் கட்சி என்றும் குறிப்பிட்டார்.
மன்னிக்கும் தன்மையும் பெருந்தன்மையும் இல்லாத தலைமை நீண்ட காலம் நீடித்த வரலாறு இல்லை என்றும், அந்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்றும் விமர்சித்தார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இருவருக்கும் உறவுமுறை அடிப்படையில் தெரிந்தவர்கள் என்பதால் திருமண மண்டபத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டதாகவும், அரசியல் குறித்து பேசாமல் பொதுவான விஷயங்களையே பேசியதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், திமுகவுடன் சேர்ந்து ஜாக்பாட் அடிக்கப் பார்த்ததாகவும், ஆனால் அவரது முகத்திரை கிழிந்து வெளியே வந்துவிட்டதாகவும் செங்கோட்டையன் விமர்சித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam