32 ஆயிரம் குடும்பங்களைத் தன்னிறைவு பெறச் செய்ய இலக்கு -அருணாச்சலில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு
அருணாச்சலப் பிரதேசம், 22 நவம்பர் (ஹி.ச.) அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறையின் மேம்பாடு குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர் கூற
Amitshah


அருணாச்சலப் பிரதேசம், 22 நவம்பர் (ஹி.ச.)

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறையின் மேம்பாடு குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், அருணாச்சலப் பிரதேசத்திற்கு வெளியிலிருந்து ஒரு லிட்டர் பால் அல்லது பால் பொருட்களைக்கூட கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

இதேபோல் முட்டை, மீன் மற்றும் இறைச்சி உற்பத்தியிலும் மாநிலம் தன்னிறைவு அடைய வேண்டும் என்றார்.

தனது கணக்கீட்டின்படி, இந்த இலக்கை எட்டுவதன் மூலம் குறைந்தபட்சம் 32 ஆயிரம் குடும்பங்களைச் சுயசார்புடைய குடும்பங்களாக மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த அதிக முதலீடு தேவையில்லை என்றும், நிதி தேவைப்பட்டால் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) நிர்வாக இயக்குநர் தேவையான நிதியுதவியை வழங்குவார் என்றும் குறிப்பிட்டார்.

நபார்டு வங்கியும் (NABARD) தேவையான ஆதரவை வழங்கும் என்பதால் யாரும் கவலைப்படத் தேவையில்லை என உறுதியளித்தார்.

கூட்டுறவு அமைப்புகள், மீன்வளத் தொழில் மற்றும் பால் உற்பத்தித் துறைகளில் மாநில அரசு தன்னிறைவை முதன்மை நோக்கமாகக் கொண்டு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இலக்கை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மாநில முதலமைச்சருடன் ஏற்கனவே விரிவாக ஆலோசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய அமித் ஷா, சுதந்திரத்திற்குப் பிறகு பெரும்பாலான காலகட்டங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அருணாச்சலப் பிரதேசத்திற்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.33,530 கோடி நிதி வழங்கப்பட்டதாகவும், 2014 முதல் 2024 வரையிலான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் ரூ.1,49,664 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் முந்தைய காலகட்டத்தைவிட நான்கு மடங்குக்கும் அதிகமான நிதி மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலத்திற்கான வரிப் பகிர்வு நிதி (Devolution Fund) 18 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மானிய உதவிகள் (Grants-in-aid) ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீடுகள் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய விமான சேவை குறித்து முக்கிய அறிவிப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போது செயல்பட்டு வரும் டோனியபோலோ, ஹோலோங்கி மற்றும் தேஜு ஆகிய மூன்று விமான நிலையங்களும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னரே உருவாக்கப்பட்டதாக அமித் ஷா குறிப்பிட்டார்.

தான் முந்தைய நாள் டோனியபோலோ விமான நிலையத்தில் தரையிறங்கியதையும் சுட்டிக்காட்டினார். டெல்லிக்கான இரண்டாவது தினசரி விமானச் சேவையைத் தொடங்க வேண்டும் என மாநில முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏற்கனவே பேசியுள்ளதாகவும், அந்நிறுவனத்திற்கு விரைவில் புதிய விமானங்கள் கிடைக்க உள்ளதாகவும் கூறினார்.

புதிய விமானக் கட்டமைப்பின் கீழ் தொடங்கப்படும் முதல் சேவை இட்டாநகர் – டெல்லி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V