Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், ஏற்கனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிசம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை தேர்தல் மாவட்டத்தின் கீழ் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைந்துள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கியுள்ளன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரடியாகப் பங்கேற்று வாக்காளர் பட்டியல் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, புதிய வாக்காளர்களாகப் பெயர் சேர்க்க விரும்புவோர், முகவரி மாற்றம் மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் முகாம்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்காகப் பொதுமக்களுக்கு உரிய விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முகாமுக்கு வந்த பொதுமக்களிடம் கேட்டபோது, இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதைவிட நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவது எளிதாகவும் வசதியாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர்.
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் விரும்பும் தகுதியுள்ள பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற முகாமில் தற்போது வரை 3ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V