குற்றாலத்தில் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் சீசன் -அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
தென்காசி, 22 நவம்பர் (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வ
Ktrlm


தென்காசி, 22 நவம்பர் (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றனர்.

இங்கு உள்ள அருவிகளில் புனித நீராடி, இயற்கை அழகை ரசித்துவிட்டுத் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர்.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் ஆர்வத்துடன் நீராடி வருகின்றனர்.

அருவிகளில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால், பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

மேலும், இரவு நேரங்களிலும் பக்தர்கள் அருவிகளில் குளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் இரவு நேரத்திலும் மெயின் அருவிப் பகுதியில் போதிய வெளிச்சம் காணப்படுவதுடன், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மின்னொளியில் அருவியில் நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வார விடுமுறையை முன்னிட்டு காலை முதலே குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் மிதமான நீர்வரத்தில் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் புனித நீராடி வருகின்றனர்.

இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களிலும் குற்றாலத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V