Enter your Email Address to subscribe to our newsletters

கும்பகோணம், 22 நவம்பர் (ஹி.ச.)
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகப் பெருவிழாவுடன் தொடர்புடைய 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவத் திருத்தலங்கள் என மொத்தம் 17 கோவில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மகாமகப் பெருவிழாவிற்கு முன்னதாக இந்தக் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 17 கோவில்களில் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதர கோவில்களான சாரங்கபாணி, சக்ரபாணி, இராமசாமி, இராஜகோபாலசுவாமி உள்ளிட்ட ஆலயங்களில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பாணாதுறை பகுதியில் உள்ள ஸ்ரீ பாணாபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 2025-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தற்போது 2028 மகாமகத்தை முன்னிட்டு ரூ.83.50 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 21-ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து வரசித்தி விநாயகர் கோவில் விமானம், பாணாபுரீஸ்வரர் கோவில் மூலவர் சுவாமி விமானம், அம்பாள் விமானம், பரிவார விமானங்கள், ராஜகோபுர விமானம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றுக்கு கலாகர்ஷணம் செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து இன்று 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
யாகசாலை பூஜைகளின் நிறைவாகப் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டு கோபு ஆரத்தி நடைபெற்றது. பின்னர் நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து கோவில் கொடிமரம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தக்கால்களுக்கு திரவியப்பொடி, மாவுப்பொடி, பால், சந்தனம் மற்றும் புனித கலசநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
முதலில் வரசித்தி விநாயகர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது. பின்னர் கோவில் ராஜகோபுரம் அருகிலும் மற்றொரு பந்தக்கால் நடப்பட்டது.
அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம் பாலாலயம் செய்யப்பட்டு, பாணாபுரீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகத் திருப்பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
2028 மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள முக்கிய ஆலயங்கள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ள நிலையில், பாணாபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகளும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V