கண்ணீரில் ஒப்பாரி வைத்து குமுறிய விவசாயப் பெண்கள் - 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அவலம்!
மன்னார்குடி, 22 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்ப
Farmers


மன்னார்குடி, 22 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மன்னார்குடி அருகே உள்ள எளவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாமணியாற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் சுமார் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பருவமழை மற்றும் ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் பலரும் வங்கிகள் மற்றும் தனியாரிடம் கடன் பெற்றும், தங்களது குடும்ப நகைகளை அடகு வைத்தும் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது பயிர்கள் சுமார் 55 நாட்களைக் கடந்துள்ள நிலையில், போதிய தண்ணீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் வாடி கருகத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, எளவனூர் பகுதியில் மட்டும் சுமார் 3,000 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வயல்களில் பசுமையாக வளர வேண்டிய நெற்பயிர்கள் கண்முன்னே வாடி வருவதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தங்களது உழைப்பையும் சேமிப்பையும் முதலீடு செய்து வளர்த்த பயிர்கள் அழிவதைத் தாங்க முடியாத விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வயல்களில் இறங்கினர்.

கருகிய பயிர்களைப் பார்த்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடிய அவர்கள், கும்மியடித்து தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர். வயல்களிலேயே கண்ணீர் மல்க பெண்கள் ஒப்பாரி வைத்த காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே கடன் சுமையில் தவித்து வரும் விவசாயிகள், தற்போது பயிர்களும் கைகொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் வாங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்றும், அடகு வைத்த நகைகளை எப்படித் திரும்பப் பெறுவது என்றும் கவலையில் உள்ளனர்.

எனவே, கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்றத் தேவையான பாசன நீரை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயக் குடும்பங்கள் தற்போது பயிர்களைக் காப்பாற்ற முடியுமா என்ற கவலையில் தவித்து வருகின்றன.

எளவனூர் பகுதியில் நிலவும் இந்தத் துயரமான சூழலுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V