Enter your Email Address to subscribe to our newsletters

நாகர்கோவில், 22 நவம்பர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நான்கு நாட்களுக்குப் பிறகே கண்டறியப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை விரைந்து மேற்கொண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகள், தடயவியல் ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எதுவும் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிந்து, அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ரயில் நிலையங்களில் ஆட்கள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ரயில்வே காவல்துறை (GRP), ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ரயில்வே நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விவரங்களுடன் கூடிய அறிக்கையை (Action Taken Report) ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது என்றும், இத்தகைய குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V