தேசிய கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி- வீரர் அஜய்குமாருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தாம்பரம், 22 நவம்பர் (ஹி.ச.) இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு மாநில அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தம
Crt


தாம்பரம், 22 நவம்பர் (ஹி.ச.)

இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பல்வேறு மாநில அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தமிழக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இறுதிப் போட்டியில் கேரள அணியை எதிர்கொண்ட தமிழக அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி தமிழக விளையாட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ராஜு தெருவைச் சேர்ந்த அஜய்குமார் (18) தனது திறமையை வெளிப்படுத்தினார்.

வேன் ஓட்டுநரான நித்தியசெல்வராஜின் மகனான இவர், போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

குறிப்பாக, விக்கெட் கீப்பிங்கில் தனது திறமையை நிரூபித்த அஜய்குமாருக்கு சிறந்த விக்கெட் கீப்பர் (Best Wicket Keeper) விருதும் கோப்பையும் வழங்கப்பட்டன.

போட்டியை முடித்துக்கொண்டு வெற்றிக் கோப்பை மற்றும் விருதுடன் அஜய்குமார் சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு மண்ணிவாக்கம் கூட்ரோடு பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அஜய்குமாருக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், இளைஞர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அஜய்குமாரை ஊர்வலமாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளம் வீரருக்கு கிடைத்த இந்த வரவேற்பு மண்ணிவாக்கம் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / LOGESHWARI V