Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அண்மையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா மட்டும் தனியாகப் பங்கேற்றதாகவும், அவரது கணவர் உமாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ஐஸ்வர்யா - உமாபதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களுக்கு மத்தியில், ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மதுப்பழக்கம் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் வீடியோவில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அர்ஜுன், கடந்த நவம்பர் 19-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தார். அதில், தனது மகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும், தனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிப்பதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வந்ததாகவும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ உரிமை இருப்பதாகவும் அர்ஜுன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜுனின் புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, நவம்பர் 23-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் நேரில் ஆஜரானார்.
அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி, அவர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் அதில் தெரிவித்த கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்று தனிநபர்களின் வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பும் வகையில் பேசக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது. பிரபலங்களின் குடும்ப வாழ்க்கை குறித்துப் பேசும் யூடியூப் விமர்சகர்களின் கருத்து எல்லைகள், தனிநபர் உரிமை மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதத்தையும் இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam