அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் மேஜையில் மனித மலம் வீச்சு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் அமரும் மேஜையில் மனித மலம் வைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன
நயினார் நாகேந்திரன்


சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் அமரும் மேஜையில் மனித மலம் வைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

கடந்த நவம்பர் 10-ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வக உதவியாளர் கண்ணதாசன், ஜெயங்கொண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.வேல்முருகனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், பள்ளியில் பட்டியலின ஆசிரியர்கள் தனி அறையிலும், மற்ற ஆசிரியர்கள் மற்றொரு அறையிலும் அமர வைக்கப்படுவதாகவும் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கண்ணதாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, பள்ளியில் சாதிப் பாகுபாடு மற்றும் குழுவாதம் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் முருகன், முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் ஆகிய மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், கல்வி அதிகாரிகள் வருவதற்கு முன்பே தடயங்கள் அழிக்கப்பட்டதாகவும், வெறும் பணியிட மாற்றத்துடன் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த கால வேங்கைவயல் சம்பவத்தின் கொடூரம் தவெக ஆட்சியிலும் தொடர்வதாகவும், திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இது உணர்த்துவதாகவும் விமர்சித்துள்ளார்.

இரண்டு வாரங்களாகக் காவல்துறை விசாரணை தாமதமாவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam