Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத், 23 நவம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கர்ரெகுட்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அதிக அளவில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தற்போதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மாநில டி.ஜி.பி. சி.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் சரணடைந்ததை தொடர்ந்து அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட டி.ஜி.பி. சி.வி. ஆனந்த் பேசுகையில், கர்ரெகுட்டா வனப்பகுதியை அரசு சுற்றுலா தலமாக மேம்படுத்தி வந்தாலும், அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தற்போது சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியாது என்றார்.
அந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பல்வேறு வகையான கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். குறிப்பாக, கால்களால் மிதிக்கும்போது வெடிக்கும் அழுத்த கண்ணிவெடிகள் அதிக அளவில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவை எங்கெங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை.
சரணடைந்த மாவோயிஸ்டுகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் 9 ஆயுதப் பதுக்கல் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கிருந்து 252 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, வனப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, வன்முறை பாதையை கைவிட்டு சரணடைந்த 214 மாவோயிஸ்டுகளுக்கு மொத்தம் ரூ.5.59 கோடி ரொக்கப் பரிசு மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட்டன. சரணடைந்தவர்கள் அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் டி.ஜி.பி. உறுதியளித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA