Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 நவம்பர் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் இன்று நடைபெறவிருந்த மத நல்லிணக்க அமைதிப் பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இன்று மாலை அமைதிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.
இதேபோல், மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும், மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தடையை மீறி பேரணி அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையின் முக்கியப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் ஒருமுறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே, தீபம் ஏற்றும் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் பேரணி மற்றும் போராட்டங்களை அறிவித்திருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam