கும்பகோணம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!
கும்பகோணம், 23 நவம்பர் (ஹி.ச.) கும்பகோணம் மேலக்காவேரியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ச
Sangaabishegam


கும்பகோணம், 23 நவம்பர் (ஹி.ச.)

கும்பகோணம் மேலக்காவேரியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில், சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு மிக்க சிவத்தலமாகும்.

மகா பிரளயத்திற்குப் பிறகு உலகை மீண்டும் படைக்கும் நோக்கில் பிரம்மதேவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அருகில் தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கி வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.

இதன் காரணமாக மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என்றும், தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் வழிபடுவோரின் தலைவிதியையே மாற்றும் அருள் சக்தி கொண்டவராக பிரம்மதேவர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

மேலும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் வடக்கு நோக்கியும், சத்ரு நிவர்த்தி மங்கள பிரத்தியங்கிரா தேவி தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்.

பிரத்தியங்கிரா தேவிக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மாலை வேளையில் சிறப்பு நிகும்பலா யாகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனியாக இரண்டு புனித நீர் கடங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

தொடர்ந்து 108 வலம்புரி சங்குகள் மற்றும் 25 சங்குகள் வைக்கக்கூடிய நான்கு மரச்சட்டங்களில் நெல்மணிகள் பரப்பி, அவற்றின் மீது சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டது.

சங்குகளுக்கு மலர்கள் தூவி, சந்தனம், குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு, பூர்ணாஹுதி நிறைவடைந்ததும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரகன்நாயகி அம்பாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது.

பின்னர் திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரருக்கு 108 சங்குகள் மூலம் சங்காபிஷேகம் செய்யப்பட்டு, கட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு புதிய வஸ்திரங்கள் மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இறுதியாக மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த ஆன்மிக நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V