இந்திரா காந்தி முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்- நிஷிகாந்த் துபே!
சிலிகுரி, 23 நவம்பர் (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கான அரசு என விமர்சித்து வருகிறார். ஆனால் காங்கிர
Nishikanth


சிலிகுரி, 23 நவம்பர் (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கான அரசு என விமர்சித்து வருகிறார்.

ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளையும் அவர் கவனிக்க வேண்டும் என்றார்.

இதற்காக, 1978ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வெளியான செய்தியையும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தையும் அவர் குறிப்பிட்டார்.

இந்திரா காந்தி 1977 மக்களவைத் தேர்தலின்போது தொழிலதிபர்களிடமிருந்து ரூ.113 கோடி பெற்றதாக உளவுத்துறை (IB) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அன்றைய ரூ.113 கோடியின் மதிப்பு தற்போதைய கணக்கில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தத் தொகையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தலில் போட்டியிட ரூ.2 லட்சம் மற்றும் இரண்டு ஜீப்புகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், RPG குழுமத்தைச் சேர்ந்த ஆர்.பி. கோயங்கா 1977 அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகவும், அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 40 முறை சோதனை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, 1952 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், அனுமதிகள் மற்றும் ஒதுக்கீடுகள் தொடர்பாக சர்க்கார் குழு மற்றும் ஹசாரி குழு அறிக்கைகளில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, ஸ்கூட்டர், சிமென்ட், பாக்சைட், இரும்பு உள்ளிட்ட தொழில்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் பிர்லா குழுமம் அதிக பயனடைந்ததாக அந்த அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், டால்மியா மற்றும் ஜம்னாலால் பஜாஜ் குடும்பத்தினருக்கும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், உரிமங்கள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி அனுமதிகளுக்காக கமிஷன் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதுமட்டுமின்றி, கோகோ கோலா, ஐபிஎம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நிதி பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் அப்போதைய இந்தியத் தூதராக இருந்த டேனியல் பேட்ரிக் மொய்னிஹன் 1978ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தில், அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், ஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைப் பலவீனப்படுத்தவும் சிஐஏ அமைப்பிடமிருந்து நிதி பெறப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளதாக நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.

கோயங்கா குடும்பத்திற்குள்ளும் 1978 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பிரிவினை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னணியிலும் வெளிநாட்டு நிதி தொடர்பான விவகாரங்கள் இருந்ததாகக் கூறினார்.

இறுதியாக, காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாறு ஊழல், கமிஷன் மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புடையது என்பதை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V