'நா சாப்பிட மாட்டேன், சாப்பிட விடவும் மாட்டேன்' என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது?- சசி தரூர் விமர்சனம்!
திருவனந்தபுரம், 23 நவம்பர் (ஹி.ச.) கார்ப்பரேட் வரிக் குறைப்பின் மூலம் கிடைத்த லாபத்தை நிறுவனங்கள் தங்களிடமே வைத்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்
Sasi tharur


திருவனந்தபுரம், 23 நவம்பர் (ஹி.ச.)

கார்ப்பரேட் வரிக் குறைப்பின் மூலம் கிடைத்த லாபத்தை நிறுவனங்கள் தங்களிடமே வைத்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிரதமர் கூறியிருப்பது உண்மைதான் என நான் கருதுகிறேன். நிறுவனங்கள் இதற்கு தங்களுடைய தரப்பு விளக்கங்களை அளிக்கலாம்.

ஆனால், நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசு வரிகளைக் குறைத்தது.

ஆனால், நிறுவனங்கள் தங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதே பிரதமரின் வாதமாக நான் புரிந்து கொள்கிறேன்.

வேலைவாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, ஐஐடியில் படித்த பட்டதாரிக்குக்கூட வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை முதன்முறையாக ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலை கடந்த காலங்களில் நாம் கேள்விப்பட்டதில்லை. குறிப்பாகக் கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புச் சூழல் மிகவும் மோசமாக இருப்பதை இது உணர்த்துகிறது.

பொருளாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நிறுவனங்கள் மீது பிரதமர் குற்றம்சாட்டுவதும், அரசின் கொள்கைகள் மீது நிறுவனங்கள் குற்றம்சாட்டுவதும் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

அரசு இன்னும் சிறப்பாகச் செயல்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்குவது (Ease of Doing Business) என்பது இன்னும் நடைமுறையில் முழுமையாகச் சாத்தியமாகவில்லை.

நான் சந்திக்கும் ஒவ்வொரு தொழிலதிபரும், ஊழல் முன்பைவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது வருத்தமளிக்கிறது.

பிரதமர் மோடி முன்பு பிரபலமாகக் கூறிய ‘நா காஊங்கா, நா கானே தூங்கா’ (நான் ஊழல் செய்யவும் மாட்டேன்; ஊழல் செய்யவும் விடமாட்டேன்) என்ற முழக்கத்தை நினைவுகூர வேண்டும்.

ஆனால், இப்போது அவர் அதில் மாட்டிறைச்சியை மட்டுமே குறிப்பிட்டாரோ என்று புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V