Enter your Email Address to subscribe to our newsletters

ஆதிலாபாத், 23 நவம்பர் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில், அப்பாவி மக்களிடம் மாந்திரீகம் மற்றும் பூஜைகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதுகுறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட இச்சோடா போலீசார்,
இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த அட்ரம் பரசுராம் (40), மண்டலி பக்கண்ணா (47), நௌகடே சேகர் (39), மண்டலி ஷைலேஷ் (27), ஷேக் அலீம் (36) ஆகிய 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில், நவம்பர் 19ஆம் தேதி மாலை ஆதிலாபாத் மாவட்டம் இச்சோடா மண்டலத்தில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் உள்ள TGWRJC பள்ளி அருகே அமைந்துள்ள சுரங்கப்பாலத்தின் அருகில் இந்த மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது.
புகார்தாரரான தொக்கலா ராஜு என்பவர் தனது அறிமுகமான ஸ்ரீபதி சங்கருடன் வேலை நிமித்தமாக ஆதிலாபாத் வந்துள்ளார்.
இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஆதிலாபாத் பேருந்து நிலையத்தில் அவர்களை அணுகிய மோசடி கும்பல், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி 5 பேரையும் கைது செய்தனர்.
இந்தக் கும்பலின் முக்கிய நபரான அட்ரம் பரசுராம் ஏற்கெனவே இதேபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மஞ்சேரியல், கரீம்நகர், பெத்தப்பள்ளி, நிஜாமாபாத், ஆசிபாபாத், காமரெட்டி உள்ளிட்ட தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்தக் கும்பல் பொதுமக்களிடம் பணம் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.3,74,000 ரொக்கம், 3 கார்கள் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கும்பலுக்கு எதிராக ஆதிலாபாத் மாவட்டத்தில் மட்டும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உட்டனூரில் 2 வழக்குகளும், இந்திரவெல்லியில் 5 வழக்குகளும், இச்சோடாவில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 10 பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 24 பேரிடம் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக ஆதிலாபாத் மாவட்ட காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாந்திரீகம் மற்றும் பூஜைகள் மூலம் பணத்தைப் பெருக்கித் தருவதாகக் கூறுபவர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V