Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 23 நவம்பர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷின் மனைவி பிரியதர்ஷினி (19). இவருக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், 20 நாட்களுக்குப் பிறகு சிகிச்சைக்காக மீண்டும் அழைத்து வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, தனது தோழியான ஜெயப்பிரியா (20) மற்றும் அவரது தாய் புவனா ஆகியோருடன் பிரியதர்ஷினி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்காக திருவள்ளூர் தேரடியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்குச் சென்றபோது, ஸ்கேன் எடுக்க காலதாமதமாகும் என்றும் மறுநாள் வருமாறும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது ஜெயப்பிரியா, தனது தாய் புவனாவைத் தொடர்புகொண்டு குழந்தையை விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். அதன்படி புவனா குழந்தையை லத்திகாவிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, குழந்தையை மர்ம நபர் ஒருவர் தூக்கிச் சென்றுவிட்டதாகவும், அவரைப் பிடிக்க போலீசார் விரட்டிச் செல்வதாகவும் பிரியதர்ஷினியிடம் ஜெயப்பிரியா பொய்யான தகவலைக் கூறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் குழந்தை மீட்கப்படாததால் சந்தேகமடைந்த பிரியதர்ஷினி, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெயப்பிரியாவுக்கு கடந்த ஜூன் மாதம் கருச்சிதைவு ஏற்பட்டதும், இதனால் ஊரில் அவப்பெயர் ஏற்படும் எனக் கருதி தோழியின் குழந்தையைத் தனது தாயின் உதவியுடன் கடத்தத் திட்டமிட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும், ஜெயப்பிரியா மற்றும் அவரது தாய் புவனா ஆகிய இருவரையும் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் நகர போலீசார் இருவரையும் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
தோழியின் குழந்தையைக் கடத்திச் சென்று, கடத்தல் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V