Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 23 நவம்பர் (H.S.)
நடிகை திரிஷாவை அரசியல் ரீதியாக முன்னிறுத்தும் நோக்கில், திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரவையைத் திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் ஒருங்கிணைத்து தொடங்கியுள்ளார்.
புதிய பேரவையின் தொடக்க விழாவில் நடிகை திரிஷாவுக்கு ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. பேரவை நிர்வாகிகள் ஒன்றிணைந்து இந்தப் பட்டத்தை அறிவித்தனர். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல நடிகை திரிஷாவும் தனித்துவமான ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டவர் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசியலில் நடிகை திரிஷாவுக்கு ஓர் இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யுடன் இணைந்து திரிஷா செயல்பட்டால், அரசியல் களத்தில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.சினிமா துறையில் பிரபலமாக விளங்கும் திரிஷாவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரவை தொடங்கப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
இருப்பினும், நடிகை திரிஷா தரப்பில் இதுகுறித்து ஏதேனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பது தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, பேரவையின் செயல்பாடுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
அரசியல் ஆதரவு நடவடிக்கைகளுடன் சமூக நலப் பணிகளிலும் ஈடுபட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பொதுமக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகப் பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய அமைப்பின் அடுத்தகட்ட செயல்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V