650 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் நிலப் பிரச்சினை -அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையா?
விழுப்புரம், 23 நவம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட வன்னிப்பேர் கிராமத்தில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள 22 சென்ட் நிலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒது
Petition


விழுப்புரம், 23 நவம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட வன்னிப்பேர் கிராமத்தில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள 22 சென்ட் நிலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக கிராம மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றினால் மாணவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் மனுக்களை வழங்கியுள்ளனர்.

இருப்பினும், இதுவரை தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் அந்த நிலத்தில் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தகரக் கொட்டகைகள் அமைத்து நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், நிலத்தை மீட்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த சிலரின் வீடுகளுக்கே சென்று மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் புகார் அளித்தவர்கள் அச்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் பேசிய சுரேஷ்,

கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த நிலம் தனிநபரின் பயன்பாட்டிற்குச் செல்லாமல், ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும், மாணவர்களின் விளையாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட 22 சென்ட் நிலத்தின் உரிமை மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன்னிப்பேர் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V