தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ் – மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்த திமுக!
சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து திமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூ
திமுக


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து திமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் பேசியதாகக் குறிப்பிட்டுள்ள திமுக, அவரை ஏதோ அறியாத சிறு குழந்தையைப் போலக் காப்பாற்ற முயன்றது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மட்டும் அவருக்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தவெகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், அதற்குப் பரிசாகவே மாநிலத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டதாகவும் திமுக தனது பதிவில் விமர்சித்துள்ளது.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்து சிலர் கட்சிக்குத் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக, பனையூர் வாயிற்கதவு அருகே பாதுகாவலர்களாக நிற்க வேண்டியவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால், அக்கட்சி முட்டுச்சந்தில்தான் போய் நிற்கும் எனக் கடுமையாகச் சாடியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam