2027 பஞ்சாப் தேர்தலில் பாஜக – அகாலி தளம் கூட்டணி -அமித் ஷா அறிவிப்பு!
புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.) 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக), சிரோமணி அகாலி தளமும் (SAD) இணைந்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்
Amitshah


புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக), சிரோமணி அகாலி தளமும் (SAD) இணைந்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இன்று அவரது அறையில் நடைபெற்ற கூட்டத்தில், சிரோமணி அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஒன்றாகக் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

அந்தக் கூட்டத்தில், அடுத்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை பாஜகவும் அகாலி தளமும் இணைந்து எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் அகாலி தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) அதிகாரப்பூர்வ கூட்டணிக் கட்சியாகச் செயல்படும்.

அகாலி தளம் எங்களின் மிகப் பழமையான கூட்டணிக் கட்சியாகும். பல தேர்தல்களில் இரு கட்சிகளும் ஒன்றாகப் போட்டியிட்டுள்ளோம்.

வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தபோதிலும் எங்களுக்கிடையிலான உறவு ஒருபோதும் முறிந்ததில்லை. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பாஜகவும் அகாலி தளமும் என்டிஏ கூட்டணியின் ஒரு பகுதியாக இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. பஞ்சாபின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) மிகப் பழமையான கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் மீண்டும் இன்று என்டிஏ கூட்டணிக்குத் திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அகாலி தளத்தின் அனைத்து தலைவர்களையும், குறிப்பாக சுக்பீர் சிங் பாதல் அவர்களையும் மனதார வரவேற்கிறேன்.

நேற்று என்டிஏ கூட்டணியை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசியபோது, அவரும் சுக்பீர் சிங் பாதல் மற்றும் எங்கள் கட்சியின் தேசியத் தலைவரைத் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, 'பாதல் சாஹேப்பின் கட்சி இணைந்தால்தான் என்டிஏ கூட்டணி முழுமையடையும்' என்ற தனது கருத்தை பிரதமர் தெரிவித்தார்.

பஞ்சாபில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மற்றும் உலக அளவிலும் இந்தக் கூட்டணி இந்து – சீக்கிய ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் என நம்புகிறேன். இரு கட்சிகளும் இந்த நோக்கத்துடன் இணைந்து செயல்படும்.

பஞ்சாபில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதே எங்களின் முதன்மையான இலக்காக இருக்கும் என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.

மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதும் எங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். அதேபோல், தேசிய உணர்வைக் கொண்ட சக்திகளை பஞ்சாபில் வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிப்போம்.

கடந்த மூன்று மாதங்களாக நிதின் நபின் மற்றும் சுக்பீர் சிங் பாதல் ஆகியோருக்கு இடையே பஞ்சாப் மாநிலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த ஆலோசனைகளின் முடிவில் ஒரு செயல்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பஞ்சாபில் நாங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ள என்டிஏ அரசுக்கு இந்தச் செயல்திட்டமே வழிகாட்டியாக இருக்கும்.

தற்போதைய ஆம் ஆத்மி கட்சி (AAP) அரசு மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துள்ளது. மக்களுக்கு அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

சீக்கிய குருமார்களை அவமதித்த அரசையோ, அந்த அரசில் உள்ளவர்களையோ இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதில் பஞ்சாப் மக்கள் உறுதியாக உள்ளனர்.

தற்போது பாஜகவும் அகாலி தளமும் ஒன்றிணைந்துள்ளதால், மக்களின் இந்த உறுதி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். இதன் மூலம் பஞ்சாபில் உண்மையான மாற்றம் ஏற்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெறவுள்ள தேர்தலில் பஞ்சாப் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

வரவிருக்கும் தேர்தலில் நிச்சயமாக என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். அதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் வளத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவோம்.

Hindusthan Samachar / LOGESHWARI V