Enter your Email Address to subscribe to our newsletters

தாராபுரம், 24 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டம், தாராபுரம் கிளை சார்பில் 9, 10, 15, 16 ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவைக்கு வந்துள்ளன.
இந்த வழித்தடங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகள் அதிகளவில் பழுதடைந்திருந்ததால், பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் நான்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சத்தியபாமா கலந்து கொண்டு, புதிய பேருந்துகளுக்குக் கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சேவையைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தாராபுரத்தில் இருந்து மேட்டுக்கடை வரை இயக்கப்படும் புதிய பேருந்தில் சத்தியபாமா பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களிடம் நலம் விசாரித்ததுடன், அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். மேலும், வழியோரங்களில் நின்றிருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
நான்கு வழித்தடங்களிலும் புதிய பேருந்துகள் இயக்கப்படுவது கிராமப்புற மக்களின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைப்பதுடன், பாதுகாப்பான பயணத்திற்கும் வழிவகுக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகரப் பொறுப்பாளர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ், நகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V