மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -3 வாரங்களாக தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
தருமபுரி, 24 நவம்பர் (ஹி.ச.) தருமபுரி நெசவாளர் காலனி நெடுமாறன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (66). திருமணமாகாத இவர், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்காலி
Arrested


தருமபுரி, 24 நவம்பர் (ஹி.ச.)

தருமபுரி நெசவாளர் காலனி நெடுமாறன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (66). திருமணமாகாத இவர், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், தருமபுரி நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் தகைச்சால் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாலை நேரங்களில் மாணவிகளுக்கு கூடைப்பந்து பயிற்சி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவரிடம் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். அப்போது, பயிற்சிக்கு வந்த மாணவிகளிடம் ஆசிரியர் ஆறுமுகம் உடல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மூன்று மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வகுப்பாசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வகுப்பாசிரியர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்துறையிடம் புகார் அளித்தது.

புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஆசிரியர் ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, அவரைக் கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று வாரங்களாக அவரைத் தேடி வந்த தனிப்படை போலீசார், சேலத்தில் பதுங்கியிருந்த ஆறுமுகத்தை இன்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V