ஆடைத் தொழிலாளர்கள் 90% பிஎஃப் தொகையைப் பெறலாம்- மத்திய அரசுக்கு தேஜஸ்வி சூர்யா பாராட்டு
பெங்களூரு, 24 நவம்பர் (ஹி.ச.) ஆடைத் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையில் 90 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ச
Tejasvi


பெங்களூரு, 24 நவம்பர் (ஹி.ச.)

ஆடைத் தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையில் 90 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூர்யா, ஆடைத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவந்த நிதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குள் மத்திய அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் புதிய நடைமுறையின்படி, ஆடைத் தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் 90 சதவீதம் வரை பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில், அவர்களுக்கான ஓய்வூதியத் தகுதியும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என தேஜஸ்வி சூர்யா விளக்கினார்.

மேலும், கணக்கில் தக்கவைத்திருக்க வேண்டிய தொகையின் அளவு 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் தொழிலாளர்கள் தங்களது அவசரத் தேவைகளுக்குப் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

இதற்கிடையே, பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆஷா பணியாளர்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆஷா பணியாளர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்க மாநில அரசைச் சேர்ந்த யாரும் முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இது வருத்தமளிப்பதாகவும், போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.கர்நாடக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அங்குள்ள நகர்ப்புற வளர்ச்சி நடைமுறைகளைப் பார்வையிடும் அவர்,

பெங்களூருவுக்குத் திரும்பிய பிறகு தற்போதைய சில போக்குவரத்துத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேஜஸ்வி சூர்யா கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, சுரங்கப்பாதை சாலை மற்றும் உயர்மட்ட வழித்தடங்கள் போன்ற திட்டங்களைக் கைவிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.

டோக்கியோ நகரத்தின் போக்குவரத்து அமைப்பு பெரும்பாலும் ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும், தனியார் கார்களைச் சார்ந்த நகர வளர்ச்சி அங்கு முக்கியத்துவம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே, பெங்களூருவின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே தனது கருத்து என தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V