Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி 24 நவம்பர் (ஹி.ச.)
காசி தமிழ்ச் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பு (KTS 5.0) நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான நிகழ்வின் மையக் கருப்பொருளாக ‘திருக்குறள் பயில்வோம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருக்குறளின் சிறப்புகளையும், தமிழ் மரபின் பண்பாட்டு அடையாளங்களையும் பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதையொட்டி, வாராணசியின் புகழ்பெற்ற அஸ்ஸி காட் பகுதியில் ரங்கோலி போட்டி நடைபெற்றது. இதில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு, சமூக ஒற்றுமை உள்ளிட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் வண்ணமயமான ரங்கோலிகளை உருவாக்கினர்.
கங்கை நதிக்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்தப் படைப்புகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற புகைப்படப் போட்டியில், பிஎச்யு மாணவர்கள் பங்கேற்று காசியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் படம்பிடித்தனர்.
குறிப்பாக, ஹரிச்சந்திர காட் அருகே அமைந்துள்ள காமகோட்டீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற மாணவர்கள், அதன் பாரம்பரியக் கட்டிடக்கலை, சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் தனித்துவமான அம்சங்களைத் தங்களது கேமராக்களில் பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வுகள் வாயிலாக மாணவர்களுக்கு காசியின் ஆன்மிகப் பின்னணி, கோயில் கட்டிடக்கலை மற்றும் தமிழ்நாட்டுடனான அதன் வரலாற்று, கலாச்சாரத் தொடர்புகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
இதுகுறித்து வாராணசி மண்டல ஆணையர் கே. விஜயேந்திர பாண்டியன் கூறுகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் அதிகளவிலான மக்களைப் பங்கேற்கச் செய்வதே இதுபோன்ற முன்னெடுப்புகளின் முக்கிய நோக்கம் என்றார்.
மேலும், காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பண்பாட்டு ஒற்றுமையை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் இந்நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களின் கலைத்திறன் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு மூலம் காசி தமிழ்ச் சங்கமம் 5.0 குறித்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரிக்க பிஎச்யு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V